மதுரை மாவட்டம், 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் மற்றும் தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர்கள்/தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை), உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மதுரை மண்டல பதிவுத்துறை அலுவலர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவிக்கையில்:-
பதிவுத்துறை சார்பில் 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் பணித்திறன் ஆய்வு மதுரை மண்டலத்தில் நடைபெற்றது. இது போன்ற ஆய்வு கூட்டம் முன்பு சென்னையில் நடைபெற்றது, தற்போது மண்டலங்களில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் முக்கிய பங்கு பதிவு துறைக்கு உண்டு. இதனை கருத்தில் கொண்டு பதிவு துறை அலுவலர்கள் அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.
கடந்த ஆண்டுகளை விட மதுரை மண்டலம் அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் தற்போது முன்னிலை வைக்கிறது. மிகப்பெரிய தொழிற்சாலைகள் இல்லாத மதுரை மண்டலம் பதிவுத்துறை மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு சிறப்பு ஆய்வுகள் மற்றும் தொடர் நடவடிக்கை மூலம் அனைத்து மண்டலங்களும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடையலாம்.
நகர்ப்புறத்தை ஒட்டி உள்ள இடங்களில் முன்கூட்டியே சந்தை மதிப்பு மற்றும் விற்பனை புள்ளி விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, வரைவு வழிகாட்டி மதிப்பு தயாரிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
பதிவுத்துறையில் துணை பதிவுத்துறை தலைவர்கள் மாவட்ட பதிவாளர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அடிக்கடி சென்று ஆவணங்களை சரிபார்த்தல், களப்பணிகளை துரிதப்படுத்தி நிலுவையிலுள்ள ஆவணங்களை உரிய நபர்களுக்கு வழங்குதல், மற்றும் அனைத்து அலுவலக ஆவணங்களும் சரியாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, பணிகளை திறம்பட மேற்கொண்டு அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தர வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன்,மதுரை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் டாக்டர் வி.எ.ஆனந்த், உதவி பதிவுத்துறை தலைவர் (மதுரை வடக்கு) சுடர் ஒளி, மதுரை மண்டல பதிவாளர்கள் மற்றும் மாவட்ட சார்பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.