செந்துறையில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேரில் பார்வையிட்டார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம். செந்துறை ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமினை , போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேரில் பார்வையிட்டார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, செந்துறை ஊராட்சி, ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம், தேளுர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, செந்துறை முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பம் அளித்த 2 நபர்களுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான ஆணைகளையும், 1 பயனாளிக்கு மின் விகிதப் பட்டியல் மாற்றத்திற்கான (Tariff change) ஆணையையும், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.தொடர்ந்து அங்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 3 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 1 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களும், கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தாது உப்பு கலவைகளும் வழங்கப்பட்டது.

மேலும், மாவட்ட ஆட்சியர் செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நக்கம்பாடி, செந்துறை ஊராட்சிகளை ஒருங்கிணைத்து செந்துறை ராஜலெட்சுமி திருமண மண்டபத்திலும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட 5, 6 வார்டுகளை ஒருங்கிணைத்து ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்திலும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காவனூர், தேளுர், விளாங்குடி ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து தேளுர் ராஜா மஹாலிலும் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் உடனடியாக கணினியில் பதிவேற்றம் செய்யப்படுதல், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் வழங்கப்படும் சேவைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள், முகாம்களுக்கு வருகை தரும் பொது மக்களின் உடல்நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகள் அளிக்கப்படுவதையும் பார்வையிட்டார்.

இம்முகாமில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.ஷீஜா, மாவட்ட நிலை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இதர அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




