நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரம் ஊராட்சியில் சின்னேரியில் 50 ஏக்கர் பரப்பளவில் நான்குவழி சாலை விரிவாக்க பணிகளுக்காக சவுடு மண் எடுக்கப்படுகிறது.

நீர்வளம் பாதிக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் மண் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை வழிநடத்திய முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிவாரசு உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்து காவல்துறையினர் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு மண் எடுக்கப்படாது என அதிகாரிகள் கொடுத்த உறுதியை அடுத்து சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

ஆனால் இதுநாள்வரை பலத்த போலீஸ் பாதுகாப்போடு மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மண் குவாரியை விவசாய சங்க தலைவர் பிஆர்.பாண்டியன் பார்வையிட்டார். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் மண் எடுக்கப்பட்டதை பார்வையிட்ட அவர் அப்பகுதி விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ; தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடுத்த சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக தன் உடல்நிலையை வருத்திக்கொண்டு அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறார். ஆனால் அவருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் செயல்படுவதாக கூறினார்.
மேலும், சின்னேரியில் அதிக அளவில் மண் எடுப்பதால் நீர்வளம் பாதிப்பதுடன் குடிநீர் ஆதாரம் அழிந்து உவர்நீர் ஊருக்குள் வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். எனவே தமிழக முதல்வர் இதில் தலையிட்டு அறிவித்த மண் குவாரி அனுமதியை ரத்து செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார்.







; ?>)
; ?>)
; ?>)