• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தர்மபுரியை புறக்கணிக்கிறதா ஸ்டாலின் அரசு? அன்புமணிக்கு எம்.ஆர்.கே. பதில்!

“2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரியில் மொத்தமுள்ள 5 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வீழ்த்தப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில்தான் தருமபுரி மாவட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின்  புறக்கணித்து வருகிறார். தருமபுரி மாவட்டம் மீதான வன்மத்தைக் கைவிடுங்கள்: காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்துங்கள், தருமபுரி – மொரப்பூர் ரயில் பாதை திட்டத்திற்காக ஒரு கைப்பிடி மண் கூட கையகப்படுத்தப்படவில்லை

’’ என  பாமகவின் சர்ச்சைக்குரிய தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு  தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும் கடலூர் கிழக்கு திமுக மாசெவுமான எம்.ஆர்.கே.  பன்னீர் செல்வம் பதிலளித்துள்ளார்.

”சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம்; அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியை திமுக கூட்டணிக்கு மக்கள் தந்தது எப்படி? அன்புமணி சொல்வது போலத் தருமபுரியைப் புறக்கணித்திருந்தால், இந்த வெற்றி சாத்தியம் ஆகியிருக்குமா?

இந்தக் கணக்குகூட தெரியாமல் அன்புமணி, வாய் புளித்ததோ மாங்காய் புளித்தோ என அவதூறுகளை அள்ளி தெளித்திருக்கிறார்.

சொந்தக் கட்சியிலேயே தனக்கு ஓர் இடமில்லாமல் வன்மத்தை வைத்துக் கொண்டு தந்தையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் அன்புமணியின் அறிக்கை விரக்தியின் உச்சம்.

தன் இயலாமையை மறைக்க இருப்பை தக்க வைத்துக் கொள்ள, தருமபுரியைப் பகடைக்காயாய் பயன்படுத்துகிறார். எந்தப் பாகுபாடும் காட்டாமல் தருமபுரியைச் சமதருமபுரியாகத்தான் திராவிட மாடல் அரசு நடத்துகிறது. அதனை வரும் சட்டமன்றத் தேர்தல் முடிவு காட்டும்.

மொரப்பூர்‌ – தருமபுரி புதிய அகல இரயில்‌ பாதை திட்டத்திற்கான நிர்வாக அனுமதி 17.04.2023 அன்று வழங்கப்பட்டு, கடந்த வருடம் மட்டும் 78.54 ஹெக்டேரில் 54.14. ஹெக்டேர் நில எடுப்புக்காக அறிவிக்கை செய்யப்பட்டது. 60 விழுக்காடு நில எடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. புறம்போக்கு நிலங்கள் 13.72.0 ஹெக்டேர் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், 2000 பட்டாதாரர்களுக்கு இதுவரை ரூ.29 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 24.40.02 ஹெக்டர், ரயில் நிலையம் மூக்கனூரில் அமைவது குறித்துத் திருத்திய நில அட்டவணை தயாரிக்கும் பணியில் உள்ளது. நில எடுப்புப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் தருமபுரி மக்களுக்கு என்ன பெற்றுத் தந்தார்? தருமபுரி காவிரி உபரி நீர்த் திட்டத்தைப் பொறுத்தவரையில் காவிரி வடிநிலப் பகுதியிலிருந்து ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பாசனப் பரப்பைத் தவிரப் புதியதாகப் பாசனப்பரப்பைக் காவிரி வடிநிலத்தில் உருவாக்க இயலாது எனக் காவிரி நதிநீர் பங்கீட்டுத் தீர்ப்பாயம் கூறியுள்ளது.

காவிரி வடிநிலத்தின் உபரிநீரைப் பிற வடிநிலத்திற்கு வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகளின் தீர்ப்பு கிடைத்த பின்னரே காவிரியில் நீரேற்று திட்டங்களைக் குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இயலும். இவையெல்லாம் தெரிந்தும் தருமபுரி மக்களை ஏமாற்றுவதற்காக வெற்று நாடகம் போட்டிருக்கிறார் அன்புமணி.

சிப்காட் தொழிற் பூங்கா திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்று சொல்லி இருக்கிறார் அன்புமணி. தருமபுரி தொழிற் பூங்காவிற்கு ஆரம்பக்கட்டப் பணிகளான அணுகு சாலை மற்றும் நுழைவாயில் தகவல் பலவை, தெரு விளக்குகள் மற்றும் இதர பணிகள் அமைக்கும் பணி ரூபாய் 12.39 கோடி திட்ட மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக 200 ஏக்கர் பரப்பளவில் உட்கட்டமைப்பு பணிகள் ரூ. 93 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இணையதளம் மூலமாக 200 ஏக்கர் நிலத்தில் தொழில் முனைவோர்களுக்காக நிலம் ஒதுக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஏழு தொழில் நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, தன் கட்சியிலும் தமிழ்நாட்டு அரசியலிலும் இடமில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் அன்புமணி இனியாவது விவரங்களை அறிந்து பேச வேண்டும். அல்லது அவரது சொந்தக் கட்சி பதற்றம் தீரும் வரை இப்படி அரைவேக்காட்டு அறிக்கை விடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்” என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று (ஆகஸ்டு 17) முதலமைச்சர் ஸ்டாலின் தர்மபுரியில் நலத்திட்ட  உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, தர்மபுரிக்கு திமுக அரசு  கொண்டுவந்த திட்டங்களைப் பட்டியலிட்டுள்ளார்.