புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே இளங்குடிபட்டியில் உள்ள அய்யனார் கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புரவி எடுப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மல்லாங்குடியிலிருந்து சுடுமண்ணால் செய்யப்பட்ட 28 புரவிகளை சுமார் 7 கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து வந்த பக்தர்கள் இளங்குடிபட்டியில் உள்ள குதிரை பொட்டலில் வைத்த நிலையில் அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று கூடினர். பின்னர் பல்வேறு இடங்களில் பெண்கள் ஒன்றிணைந்து மேளதாளங்கள் முழங்க குலவையிட்டு கும்மியடித்தனர்.
பின்னர் அப்பகுதியில் உள்ள கோயில் வீட்டிலிருந்து இரண்டு சாமிகள் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலமாக குதிரை பொட்டலுக்கு சென்று அங்கு உள்ள இரண்டு குதிரைகளில் 2 சாமியாடிகள் ஏறி அமர்ந்து இருந்த நிலையில் சுமார் அரை மணி நேரம் வண்ணமிகு வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குதிரை பொட்டலில் இருந்து புரவிகளையும் இரண்டு புரவிகளில் இரண்டு சாமியார்கள் அமர வைத்து அவர்களையும் தோளில் சுமந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவில் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

பின்னர் அங்கு மூன்று தினங்கள் அந்த புரவிகள் வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து அய்யனார் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. மேலும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோயில் திருவிழா நடைபெறுவதால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க காவல்துறை சார்பில் விழா நடைபெறும் பகுதியில் 60 இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இளங்குடிபட்டி அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா களைகட்டியதால் அந்த கிராமமே விழாக்கோலம் பூண்டது.