தென் மாவட்டங்களில் நடைபெறும் கட்சி நிகழ்வில் பங்கேற்பதற்காக பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஹைதராபாத்தில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

2026 சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி அடையும். இதுதான் மக்களின் மனதில் உள்ளது. மேலும் திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். திமுகவின் அவல ஆட்சி குறித்து பாஜக தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வார்கள். திராவிடம் மாடல் ஆட்சி என்று சொல்கிறார்கள் ஆனால் சட்ட ஒழுங்கு சரியாக இல்லை, கொலைகள் மற்றும் போதைப்பருட்கள் அதிகரித்துள்ளது. ஆளுங்கட்சி அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் பல வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளியில் இருக்கிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அர்த்தமற்ற, சம்பந்தம் இல்லாத வார்த்தைகளை பேசி வருகிறார். மனோகர் பரிகர் மற்றும் அருண் ஜெட்லி குறித்து அவர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. செய்திகளில் வரவேண்டும் என்பதற்காக ஆபரேஷன் சிந்து குறித்து பேசி வீரர்களின் உணர்ச்சிகளை காயப்படுத்துகிறார். அவர் எப்போதெல்லாம் வெளிநாட்டில் கால் வைக்கிறாரோ அப்போதெல்லாம் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சரியாக இல்லை என்று பேசி வருகிறார். மக்கள் அவர் பேச்சில் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். அவருக்கு தலைவராக இருப்பதற்கு தகுதி இல்லை. பொருளாதாரரீதியாக உலக அளவில் நான்காவது இடத்தில் இருக்கிறோம், விரைவில் மூன்றாவது இடத்திற்கு செல்ல போகிறோம். அதற்கெல்லாம் காரணம் மோடி தான். பொறாமை கொள்ளக்கூடாது அதை நாம் பாராட்ட வேண்டும். ஆனால் திமுக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் வாக்கு வங்கிக்காக அரசியல் செய்கிறார்கள். மக்கள் முழுவதுமாக பிஜேபியை இந்த எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யும் மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியடைய செய்வார்கள்.
கூட்டணியிலிருந்து தேமுதிக ஓபிஎஸ் வெளியேறியது குறித்த கேள்விக்கு:

கூட்டணிக்கு யார் வருகிறார்கள் என்று பார்த்து சூழ்நிலைக்கேற்ப முடிவெடுப்போம். தேர்தல் வருவதால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர விரும்புபவர்களை வரவேற்கிறோம். அமித்ஷா அவர்கள் அறிவித்துள்ளதன் அடிப்படையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தலைமையில் அமையும் என்று சொல்லி இருக்கிறார். ஓபிஎஸ் எடுத்துள்ள முடிவு இனிமையாக இல்லை அவர் எப்போதும் திமுகவிற்கு எதிராக பேசியிருக்கிறார். அனைவருக்கும் முடிவெடுக்க தனித்தனி விருப்பங்கள் உண்டு அதில் கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. ஓபிஎஸ் மீண்டும் இணைவது குறித்து காலம்தான் முடிவு சொல்லும்.
அண்ணாமலைக்கு பதவி உள்ளதா என்ற கேள்விக்கு:
அண்ணாமலை அவர் வேலையை செய்து வருகிறார். திமுக மக்களுக்கு நல்லது செய்திருந்தால் அதை சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் ஆட்சி முற்றிலுமாக தோல்வியடைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் பிளவு ஏற்படுத்தி தவறான தகவல்களை வெளியிட பார்க்கிறார்கள். அமித்ஷா சொன்னது போல அண்ணாமலை கட்சிக்காக கடுமையாக உழைக்கக் கூடியவர்.
நடிகர் விஜய் கட்சி குறித்த கேள்விக்கு:
அனைவருக்கும் தங்கள் முடிவுகளை தேர்ந்தெடுக்க உரிமையுள்ளது ஆனால் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்வார்கள். தற்போது மக்கள் மனநிலை அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் என சுதாகர் ரெட்டி கூறினார்.