சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டிக்கு 7 கிலோமீட்டர் செல்வதற்கு 30 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை செல்வதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதிலும் பல பேருந்துகள் பழைய பேருந்துகளாக இருப்பதால் பேருந்துகளை இயக்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக பேருந்துகளில் கரும்புகையை கக்கிக்கொண்டு செல்வதும் 10 கிலோமீட்டர் வேகத்திலேயே பேருந்துகள் செல்வதுமாக பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது இதனால் வாடிப்பட்டி சென்று தொலைதூரங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் வாடிப்பட்டியில் இருந்து சோழவந்தான் வரும் பேருந்துகள் சோழவந்தான் ரயில்வே பீடர் ரோடு பகுதியில் நின்று செல்வதால் இதுவும் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது.
சோழவந்தான் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு வருட காலம் ஆகக்கூடிய நிலையில் பேருந்து நிலையத்திற்குள் வாடிப்பட்டியில் இருந்து வரும் பேருந்துகள் வந்து செல்ல இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் பேருந்து நிலையத்திற்குள் வணிக வளாகங்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள் வருவாய் இன்றி பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராததால் நாளுக்கு நாள் சமூக விரோத செயல்களும் அதிகரித்து வருகிறது குறிப்பாக சோழவந்தானின் பசும்பொன் நகர் ஆலங்கொட்டாரம் போன்ற பகுதிகளில் இருந்து அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு சமூக விரோதிகள் மற்றும் மது பிரியர்களால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து தொடர்ச்சியாக சமூக வலைதளங்களிலும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடமும் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மாணவிகளின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு வாடிப்பட்டியில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டும்.
சோழவந்தான் பேருந்து நிலையத்தில் புற காவல் நிலையம் ஒன்றை ஏற்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் காலை மாலை இரு வேலைகளில் காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிர படுத்த வேண்டும் பெரிய அளவில் குற்ற சம்பவங்கள் நடக்கும் முன்பு அதிகாரிகள் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்




