மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 18வது வார்டு ஆவடைத்தங்கம் நாடார் தெருவைச் சேர்ந்தவர்கள் விநாயக் – கண்மணி தம்பதி. இந்த தம்பதிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்து, பிறந்த நாளன்றே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆரோக்கியத்துடன் பிறந்துள்ளது.
ஒரு மாதத்திலேயே உசிலம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு குடும்பத்தினர் பராமரிப்பில் வளர்ந்து வந்த இக் குழந்தை தாய்ப்பால் அருந்தும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் கண்மணி மற்றும் உறவினர்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி 8 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் பெண் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.