காரைக்கால் அடுத்துள்ள அம்பகரத்தூரில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காரைக்கால் மட்டுமன்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.

சூரனை சம்ஹாரம் செய்த இடம் என்பதால் பத்திரகாளி அம்மன் சூலத்தின் மூன்று முனைகள் கீழ்நோக்கி இருப்பது போல (சம்ஹாரம் செய்வது போல்) திரிசூலத்தை கையில் பிடித்திருப்பது இக்கோயிலின் தனி சிறப்பு. இக்கோயில் உள்ள அம்மனை வழிபட்டால் பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்நிலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத முதலாவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் மற்றும் பெண்கள் விளக்கேற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் இவ்வாலயத்தில் செவ்வாய் கிழமைகளில் வழிபடுவது சிறப்பாகும். அதனால் செவ்வாய் கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வழிபடுவதால் இந்த செவ்வாய் கிழமை முதல் இனி எல்லா செவ்வாய் கிழமையும் காலை 6:00 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து சாமி தரிசனம் செய்ய ஏதுவாக ஆலயம் திறந்திருக்கும் என ஆலய நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.