• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது !!!

BySeenu

Jul 16, 2025

பெங்களூரில் இருந்து வாங்கி வந்து கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த நாகாலாந்து வாலிபரை காவல் துறை கைது செய்தனர்.

கோவை மாநகரப் பகுதியில் போதை பொருள் விற்பதை தடுக்க காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வட மாநிலத்தில் இருந்து உயர் ரக கஞ்சா போதை மாத்திரைகள் மற்றும் உயர் ரக போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க ரயில் நிலையங்கள் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை அடுத்த வடகோவை மேம்பாலம் பகுதியில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக ஆர்.எஸ் புரம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே காவல் துறையினர் விரைந்து சென்று அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு, பின் முரணாக பதில் அளித்ததால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அவர் நாகலாந்து மாநிலம் திமாபூர் பகுதியைச் சேர்ந்த லென்ஜாங்கம் என்பதும், அவர் வாடகைக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டி வருவதும் தெரிய வந்தது. அவருக்கு போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டதால் அடிக்கடி பெங்களூர் மற்றும் மும்பைக்கு சென்று குறைந்த விலையில் போதை மாத்திரைகளை வாங்கி வந்து கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து அதிக விலைக்கு விற்றதும் தெரிய வந்தது.

உடனே காவல் துறையினர் லென்ஜாங்கம் கைது செய்து அவரிடமிருந்து 36 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.