காரைக்காலில் புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ காரைக்காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழா இன்று மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரும் ஈசனால் அம்மையே என்றழைக்கப்பட்ட ஸ்ரீ காரைக்காலம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மாங்கனி திருவிழா விமரிசையாக நடைபெறும். இன்று மாலை விநாயகர் பூஜையுடன் துவங்கிய மாங்கனித்திருவிழாவின் துவக்கமாக மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியான பரமதத்த செட்டியார் புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பரமதத்த செட்டியார் வீதியுலாவாக வலம் வந்து ஸ்ரீகாரைக்காலம்மையார் ஆலயம் வந்தடைந்தார். மாப்பிள்ளை அழைப்பு நிகழ்வான பரமதத்த செட்டியார் வீதியுலா நிகழ்ச்சியில் உபயதாரர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.