மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி அருள்மிகு சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தெரிவித்ததாவது:-
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் வருகிற 24.07.2025-ஆம் தேதியன்று ஆடி அமாவாசை திருவிழா நடைபெறவுள்ளது. அத்திருவிழாவிற்கு வருகிற 19.07.2025 முதல் 25.07.2025 வரை சுவாமி தரிசனம் செய்ய சுமார் 5 இலட்சம் பக்தர்கள் வருகை தரவுள்ளதால் விழா சிறப்பாக நடைபெற துறைவாரியாக பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
காவல்துறையின் வாயிலாக, மலையடிவாரப் பகுதிகளில் தேவையான அளவு சோதனைச் சாவடிகள் அமைத்து திருக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்களுடன் தடை செய்யப்பட்ட பொருட்களையோ தீப்பற்றக் கூடிய பொருட்களையோ அல்லது பிளாஸ்டிக் பைகளையோ எடுத்துச் செல்லவில்லை என்பதை உறுதிசெய்து கொள்ளல் வேண்டும். மலைப்பாதையில் செல்லும் பக்தர்கள் ஒரே சீராக செல்ல உரிய காவலர்களை பாதையில் ஆங்காங்கே நிறுத்தி பக்தர்கள் செல்வதை ஒழுங்குபடுத்திடல் வேண்டும். வாகனங்களில் வருகை தரும் பக்தர்களின் வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்ல போதிய அளவிலான இடவசதியினை ஏற்படுத்திட வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்கும்பொருட்டு பொதுமக்கள் வெள்ளைப்பாறை வழியாக அருள்மிகு சுந்தரமூர்த்தி சன்னதி சென்று அருள்மிகு சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்துவிட்டு சன்னதிக்கு எதிரே உள்ள புதிய பாதை வழியாக வெளியே வந்து அருள்மிகு சந்தன மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்துவிட்டு இரும்புப் பாலத்தின் வலதுபுறமாக கீழே இறங்குமாறு ஒருவழிப்பாதை ஏற்படுத்தி சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்திடவும் மற்றும் கோவிலின் அருகே பக்தர்கள் காலணி அணியாமல் சுவாமி தரிசனம் செய்திடவும் காவல்துறையினர் தக்க ஏற்பாடுகள் செய்திடல் வேண்டும். தாணிப்பாறையிலிருந்து மலைக்கோயில் வரை போதிய அளவிலான எண்ணிக்கையில் வில்போன்கள் மூலம் தகவல் தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறையின் வாயிலாக, திருக்கோயில் வளாகத்தில் மற்றும் மலைப்பாதைகளில் ஜெனரேட்டர் மூலம் தேவையான அளவு மின்வினக்குகள் மற்றும் சோலார் விளக்குகள் (குறைந்தது 750 விளக்குகள்) அமைக்கப்பட வேண்டும். மலைப்பாதையில் குறுகலான மற்றும் ஒற்றையடிப் பாதைகளை பக்தர்கள் செல்ல ஏதுவாக சீர்படுத்தி நல்ல முறையில் வைத்திருத்தல் வேண்டும். சுவாமி தரிசனம் செய்திட வருகை தரும் பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி சுவாமி தரிசனம் செய்திட தக்க ஏற்பாடுகள் செய்திடல் வேண்டும். மலைக்கோயிலில் பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினருடன் இணைந்து சுவாமி தரிசனம் செய்திட வருகை தரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி (அதாவது 50 கழிப்பறைகள்) மற்றும் இதர அடிப்படை வசதிகளை சிறந்த முறையில் செய்திடல் வேண்டும். மலைப்பாதையில் வயதான பக்தர்களின் வசதிக்காக 10 டோலிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். பக்தர்களின் வசதிக்காக கடந்த காலங்களில் செய்யப்பட்டது போன்று ஹாம் ரேடியோ மற்றும் 10 வில்போன்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். வழுக்குப் பாறையில் பக்தர்களின் வசதிக்காக கைப்பிடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பக்தர்களால் வீசப்படும் குப்பைகளை சேகரிக்க 100 குப்பைப் கூடைகளை பக்தர்கள் கூடுமிடங்களில் அமைத்திடல் வேண்டும். மேலும் கடைகள் கோயில் நிர்வாகத்தால் ஏலம் விடப்படும்போது, தென்னங்கீற்றுகளுக்கு பதிலாக தகர செட்டுடன் கூடிய கடைகளை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பக்தர்கள் வரும் மலைப்பாதைகளில் (தாணிப்பாறை மற்றும் வாழைத்தோப்பு ஆகிய இரு பகுதிகளிலும்) குறிப்பிட்ட இடைவெளியில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்திடல் வேண்டும்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வாயிலாக, இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் குடிதண்ணீர் வசதிக்காக சின்டெக்ஸ் தொட்டிகளில் மலைப்பாதையின் பல்வேறு இடங்களில் குடிதண்ணீர் சேமித்து வைக்கப்பட வேண்டும். வருகை தரும் பக்தர்களுக்கு கழிப்பிட வசதி மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டிய இடங்களை கண்டறிந்து அவ்விடங்களில் அதிக அளவிலான கழிப்பிட வசதி மற்றும் இதர வசதிகளை செய்திடல் வேண்டும்.
மருத்துவத் துறையின் வாயிலாக, இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக கடந்த ஆண்டைப் போலவே சதுரகிரி, தாணிப்பாறை, வாழைத்தோப்பு, காத்தடிமேடு, குனிராட்டி தீர்த்தம், சங்கிலிப்பாறை மற்றும் இரட்டைலிங்கம் ஆகிய இடங்களில் அதிக அளவில் மருத்துவக் குழுக்களை தேவையான மருந்துகளுடன் (முக்கியமாக விஷக்கடி மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்) ஐஸ்பாக்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் நியமிக்கப்பட வேண்டும். மலையடிவாரத்தில் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அவசர சிகிச்சை அளித்திட ஏதுவாக போதிய எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ் வண்டிகளை தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும். காவல்துறை, வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருடன் தடையற்ற தொலை தொடர்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மலைப்பாதையில் குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ முகாம்களை அமைத்திடல் வேண்டும். சித்த மருத்துவத்துறையின் சார்பாக நிலவேம்பு கஷாயம் மற்றும் இதர மருந்துகளை வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்திடல் வேண்டும். மேலும் 108 ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். குறைந்தது 30 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இப்பணிகளை இணை இயக்குநர், (மருத்துவம் மற்றம் ஊரக சுகாதாரப் பணிகள்) மதுரை மற்றும் துணை இயக்குநர், (சுகாதாரப் பணிகள் மற்றும் நோய்தடுப்பு மருந்துகள்) ஆகியோரின் கண்காணிப்பில் சிறப்பாக செய்திடல் வேண்டும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வாயிலாக, இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, டி.கல்லுப்பட்டி மற்றும் மதுரை ஆகிய இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். அவ்வாறு இயக்கப்படும் பேருந்துகள் பக்தர்களை தாணிப்பாறையில் இறக்கிவிட உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதே போல் மலைக்குச் சென்று திரும்பும் பக்தர்களை திருப்பி அனுப்பிட போதிய அளவிலான பேருந்துகளை இயக்கிட நடவடிக்கை எடுத்திடல் வேண்டும். இரவு நேரத்தில் பேருந்துகள் இயக்குவதை நிறுத்திடல் வேண்டும்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் வாயிலாக, அதிக அளவில் கயிறு மற்றும் மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வாழைத்தோப்பு, தாணிப்பாறை, வத்ராயிருப்பு, மாவூத்து, சதுரகிரி மலைப்பாதை மற்றும் கோவில் பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர்களை காவல்துறை மற்றும் வனத்துறையினருடன் இணைந்து பணியாற்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையிலிருந்து உரிய அலுவலர்களை நியமனம் செய்தல் வேண்டும். அவ்வாறு நியமனம் செய்யப்படும் அலுவலர்கள் பகல் மற்றும் இரவு முழுவதும் பணியில் இருக்க வேண்டும். High Range Torch Light வைத்திருக்க வேண்டும். நீர்த்தாங்கி ஊர்திகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அந்த ஊர்திகளை விருதுநகர் மாவட்டம் தவிர்த்து அருகாமையில் உள்ள இதர மாவட்டங்களிலிருந்து வரவழைத்திடல் வேண்டும். கருப்பசாமி கோவில் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரால் தற்காலிக கட்டுப்பாட்டு அறை நிறுவ வேண்டும். அவ்விடத்தில் மருத்துவ முகாமும் அமைத்திடல் வேண்டும். அரிவாள், கடப்பாறை, கைரம்பம், பவர்ஷா, கயிறுகள், லைப் ஜாக்கெட் போன்ற உபகரணங்களை போதிய அளவு வைத்திருக்க வேண்டும். இயற்கை இடர்பாடுகளால் இன்னல்கள் ஏற்படும் பட்சத்தில் அவற்றினை எதிர்கொள்ளவும் அந்த இடர்பாடுகளிலிருந்து பக்தர்களை காக்கவும், தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
வனத்துறையின் வாயிலாக, பக்தர்கள் வனப்பகுதியின் உள்ளே சென்று விடாமல் கண்காணிக்க வேண்டும். மலைப்பகுதியில் உள்ள பக்தர்களிடமிருந்து GRIZZLED SQUIRREL அணில்கள் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மலைப்பாதையில் காவல்துறை, அறநிலையத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். முக்கியமாக, காட்டாற்று வெள்ளம் வரும் என கண்டறியப்படும் இடங்களில் தேவையான உபகரணங்களுடன் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், மதுபானங்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றை வனப்பகுதிக்குள் பக்தர்கள் எடுத்துச் செல்லக்கூடாது என பக்தர்கள் மலையேறும் முன், விளம்பரம் செய்திடல் வேண்டும். மலையேறும் பக்தர்கள் மேற்குறிப்பிடப்பட்ட பொருட்களை கொண்டு செல்லாமல் இருக்க பக்தர்களுக்கு சிரமமின்றி உரிய சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் பக்தர்கள் செல்லும் மலைப்பாதையில் குழு (காவல்துறை, மருத்துவத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்களுடன்) அமைத்து அக்குழுவினர் தொடர்ச்சியாக அப்பாதையில் சென்று தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வருவாய்த்துறையின் வாயிலாக, தாணிப்பாறை, வாழைத்தோப்பு மற்றும் திருக்கோவில் மற்றும் இதர இடங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிர்வாக நடுவர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். அவ்வாறு நியமனம் செய்யப்படும் அலுவலர்கள்
மூலம் சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகளை மேற்கொள்வதுடன் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்திட அனைத்து முன்னேற்பாடுகளையும் செவ்வனே செய்திட வேண்டும். தாணிப்பாறை பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பேருந்து போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறையின் வாயிலாக, மதுரையிலிருந்து தாணிப்பாறை, வாழைத்தோப்பு மற்றும் திருக்கோவிலுக்குச் செல்லும் அனைத்து சாலைகளையும் பார்வையிட்டு, பழுதடைந்துள்ள சாலைகளை புதுப்பித்து அல்லது செப்பனிட்டு மேற்படி திருவிழா நாட்களில் போக்குவரத்துக்கு பயன்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து தேவையான அளவில் எச்சரிக்கை பலகைகள் வைத்திட வேண்டும். கடந்த காலங்களில் விபத்துகள் ஏற்பட்ட இடங்களில் தேவையான இடங்களில் வேகத்தடைகள் ஏற்படுத்தி, போதுமான பாதுகாப்பு முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
மின்வாரியத்துறையின் வாயிலாக, தாணிப்பாறை, வாழைத்தோப்பு மற்றும் திருக்கோவில் வளாகத்தில் அமைக்கப்படும் தற்காலிக கடைகள், அன்னதானக் கூடம் மற்றும் பக்தர்களால் போடப்படும் கொட்டகைகள் அமைப்பதற்கு முறையாக அனுமதி பெற்றவர்களுக்கு மின் இணைப்பு வழங்கி 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும். மின்சாரத்தினால் விபத்துகள் ஏதும் ஏற்படாவண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன், மின்சார உபயோகத்தினையும் கண்காணித்து, பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகத்தினரால் செய்யப்படும் மின் வசதிகளை கண்காணித்து மின்சார விபத்து ஏதும் ஏற்படாவண்ணம் போதுமான பணியாளர்களைக் கொண்டு கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும்.
எனவே, தங்களது துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், அனைத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.கே.அர்விந்த் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.கண்ணன், மதுரை மாவட்ட வன அலுவலர் டி.தருண்குமார், திருவில்லிபுத்தூர் துணை இயக்குனர் (மேகமலை புலிகள் காப்பகம்) டி.தேவராஜ், உட்பட அனைத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.