விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் துலுக்கன்குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததால் பட்டாசு உற்பத்தி செய்யும் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதன் காரணமாக பட்டாசு ஆலை கடந்த ஒரு மாதமாக மூடி கிடக்கிறது.. இந்நிலையில் வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப் இன்ஸ்பெக்டர் செண்பகவேலன், ஆகியோர் வெம்பக்கோட்டை, துலுக்கன்குறிச்சி ,சத்திரம், குக்கன்பாறை ,பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மூடி கிடக்கும் பட்டாசு ஆலையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை பார்த்து உடனடியாக பட்டாசு ஆலையில் சோதனை நடத்தினார்கள்.

அப்போது பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவகாசி புது தெருவை சேர்ந்த கண்ணன் (வயது 33) என்பவரை கைது செய்தனர். வெம்பக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்த பொன்னுச்சாமி தப்பி ஓடி விட்டார்.
மேலும் தயாரிக்கப்பட்ட 25 குரோஸ் வெள்ளைத் திரிகள் சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்பட்ட சரவெடிகள் ஆறு பெட்டிகள்,20 கிலோ சோல்சா வெடிகள் , மற்றும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.தலைமறைவான வெம்பக்கோட்டையை சேர்ந்த பொன்னுச்சாமி (வயது 42) மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.