விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே யுள்ள திருத்தங்கல் அக்ரகாரத் தெருவில் வசித்த கண்ணன் என்ற கோபால கிருஷ்ணன் ஐயங்கார்( வயது 79)- ஜனகம்மாள்( வயது 74) முதிய தம்பதியினர். கோபாலகிருஷ்ணன் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலில் அர்ச்சகராக ( ஸ் தானிகம் )யிருந்து ஓய்வு பெற்றவர்.

வயோதிக தம்பதியினருக்கு குழந்தை பாக்கியமில்லாத நிலையில் கோபாலகிருஷ்ணன் தனது சகோதரி ரோஜியின் மகன் சந்தோஷை முறைப்படி தத்தெடுத்துள்ளார். வயது முதிர்வு காரணமாக கோபாலகிருஷ்ணனும்,அவரது மனைவி ஜனகம்மாளும் உடல் நலம் குன்றி வீட்டிலிருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதற்கிடையே மருத்துவர் வந்து பரிசோதித்த நிலையில், ஜனகம்மாள் சுமங்கலியாக உயிரிழந்தது தெரிய வந்தது. மனைவி இறந்தது பற்றிதகவலறிந்த கோபாலகிருஷ்ணன் மனமுடைந்து படுக்கையில் படுத்துள்ளார்.
நீண்ட நேரம் அவர் எழுந்திருக்காத பட்சத்தில், மீண்டும் மருத்துவர் வந்து கோபாலகிருஷ்ணனை பரிசோதனை செய்தபோது அவரும் இறந்தது தெரியவந்தது. மனைவி இறந்த ஒரு சில மணி நேரத்திலேயே கணவனும் உயிரிழந்தது உறவினர்களை அதிர்ச்சியடையச் செய்து சோகத்தில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து உறவினர்கள் ஒன்றுகூடி, சாவிலும் இணைபிரியாமல் ஒரே நாளில் உயிரிழந்த வயோதிக தம்பதியினரை ஒரே பாடையில் படுக்க வைத்து இறுதிச் சடங்குகளை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட கணவன்- மனைவியின் உடல்கள் பிராமண சமுதாய மயானத்தில் ஒரே தகன மேடையில் எரியூட்டப்பட்டது. சாவிலும் இணை பிரியாத வயோதிக தம்பதியினர் குறித்த தகவல் திருத்தங்கல் நகர மக்களிடையே ஆச்சரியத்துடன், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.