புதுச்சேரியில் பூர்வீகமாக வசிக்கும் மலக்குறவன், காட்டுநாயக்கர், எருகுலா, குருமன்ஸ் மலக்குறவன் ஆகிய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 44 ஆண்டுகளாக பழங்குடியின மக்கள் போராடி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்படுவதாக புதுச்சேரி அரசு கூறி வருகிறது.

இந்த நிலையில் இன்று சுதேசி பஞ்சாலை அருகே பழங்குடியினர் வேட்டையாடும் கருவிகளுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பு தலைவர் ராம்குமார், மலக்குறவன் நல்வாழ்வு சங்க தலைவர் செல்வராஜ், பழங்குடியினர் விடுதலை இயக்க மாநில செயலாளர் ஏகாம்பரம் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் பூர்வ குடிகளாக இருக்கும் மலக்குறவன், காட்டு நாயக்கன், எருகுலா, குருமன்ஸ் ஆகிய பழங்குடியின மக்களை மத்திய அரசு அட்டவணை பழங்குடியினர் பட்டியலில் உடனடியாக சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி அனைவரும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
போராட்டத்திற்கு பிறகும் அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் சட்டமன்ற பொது தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.