திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் மா விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மாங்காய்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும், மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பன கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மாங்காய் விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்களிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஒரு டாக்டரில் ஒரு லோடு மாங்காய்களை கொண்டு வந்து சாலையில் கொட்டி சென்றனர். இதனையடுத்து நிர்வாகிகள், கட்சியினர் கலைந்து சென்ற நிலையில் சாலையில் கொட்டப்பட்டு இருந்த மாங்காய்களை சுற்றி இருந்த பொதுமக்கள் ஒவ்வொருவரும் நல்ல மாங்காய்களாக பார்த்து தங்கள் வைத்திருந்த பைகளில் சேகரித்து கொண்டு சென்றனர்.
அதிலும் ஒருவர் தான் கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து அதில் மாங்காய்களை சேகரித்து கொண்டு சென்றார். மேலும் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் என்பதால் பயணிகள் அதிகளவு செல்லும் சாலையில் இந்த மாங்காய்கள் கொட்டி கிடந்ததால் ஏராளமானோர் மாங்காய்களை தேர்ந்தெடுத்து அள்ளிச்சென்றனர்.