கரூர் மாநகராட்சி உட்பட்ட ராமானுஜம் நகர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கத்தி மற்றும் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் எடுப்பதும், அதனை சமூக வலைதளங்களில் பகிர்வது, பொதுமக்களுக்கு இடையூறு செய்து, அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி ராமானுஜம் நகரை சேர்ந்த கோகுல கிருஷ்ணன் (வயது 22), வையாபுரிநகரை சேர்ந்த சுஜித் (வயது 15) ஆகியோரை கரூர் நகர போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ராமானுஜம் நகரை சேர்ந்த சூரியபிரகாஷ் (வயது 18), முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த கெளதம் (வயது 23) ஆகியோரிடம் ஆயுதங்களை கொடுத்து வைத்திருப்பதாக கூறியுள்ளனர். அவர்களிடமிருந்து அரிவாள், கத்தி, வீச்சருவாள் உள்ளிட்ட 11 பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நேற்று பயங்கர ஆயுதங்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று காலை 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கரூர் மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
