விருதுநகர் மாவப்பம் இராஜபாளையம் அருகே அய்யனாபுரத்தில் மேல ராஜகுலராமன் ஊராட்சியின் சார்பில் புதிதாக பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டது ஒன்றிய நிதியிலிருந்து கட்டப்பட்ட சுகாதார வளாகம் பல மாதங்களாக திறக்கப்படாத நிலைமை இருந்து வந்தது.

அயனாபுரம் பகுதி பெண்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர் கழிப்பறை திறக்காததற்கு உரிய காரணமும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பகுதி பெண்கள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவனத்திற்கு சுகாதார வளாக பிரச்சினையை கொண்டு வந்தனர். கட்சியின் தலைவர்கள் விசாரித்த போது ஊராட்சி நிர்வாகம் முறையாக புதிய இணைப்பு பெறுவதற்கு டெபாசிட் தொகையை கட்ட வில்லை என்கிற காரணம் தெரியவந்தது.
மேலும் சுகாதார வளாகத்தை ஒட்டி உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால் மின்வாரியமும் இணைப்பு கொடுப்பதற்கு மறுத்து வந்ததும் தெரிந்தது உடனடியாக சிபிஎம் சார்பில் சுகாதார வளாகத்தை திறக்க மறுக்கும் ஊராட்சி நிர்வாகத்தையும் மின் இணைப்பு கொடுக்க மறுக்கும் மின்வாரியத்தையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அய்யனாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கிளை செயலாளர் கருப்பாயி தலைமையில் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட செயலாளர் குருசாமி கண்டன உரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஒன்றிய செயலாளர் முனியாண்டி கமிட்டி உறுப்பினர்கள் செல்வம் சோமசுந்தரம் கிளைச் செயலாளர் காசிராஜன் பழனிச்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கட்சித் தலைவர்கள் செயலரிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஊராட்சி செயலர் வியாழக்கிழமை அன்று சுகாதார வளாகம் செயல்பாட்டிற்கு வரும் என்று உறுதி அளித்தார்.