2 செ.மீ. வரையிலான அளவு கொண்ட சிறுநீரகக் கற்களை குணப்படுத்த ஆர்.ஐ.ஆர்.எஸ் எனப்படும் குறைவான ஊடுருவல் உள்ள சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், இரத்தத் தட்டு உறைதல் தொடர்பான மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகளுக்கு ஆர்.ஐ.ஆர்.எஸ் சிகிச்சை மூலம் பெரிய அளவிலான சிறுநீரகக் கற்களை நீக்க அதிநவீன வசதிகளும் உயர் நிபுணத்துவமும் தேவைப்படும்.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், ரெட்ரோகிரேட் இண்ட்ரா-ரீனல் சர்ஜரி எனப்படும் சிகிச்சை மூலம் 62 வயதுப் பெண் நோயாளி ஒருவருக்கு சிறுநீரகத்தில் இருந்த இரண்டு பெரிய கற்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன. அவர், இரத்தக் கட்டி ஏற்படுவதைத் தடுப்பதற்கான இரு வெவ்வேறு வகையான மருந்துகளை உட்கொண்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக, ஆர்.ஐ.ஆர்.எஸ் என்பது, 2 செ.மீ வரையிலான அளவுள்ள சிறுநீரகக் கற்களை அகற்றப் பயன்படுத்தப்படும் குறைவான ஊடுருவல் சிகிச்சையாகும். பெரிய அளவிலான கற்களை நீக்க இம்முறை பயன்படுத்தப் பட்டாலும், இரத்தக் கட்டி ஏற்படுவதைத் தடுப்பதற்கான மருந்துகளை உட்கொண்டுவரும் நோயாளிகள் விஷயத்தில் அதிநவீன வசதிகளும் நிபுணத்துவமும் இருந்தால் மட்டுமே இம்முறையைப் பயன்படுத்த இயலும்.
இந்நோயாளிக்கு இதயநோய்க்கான சிகிச்சையில் ஒரு மாதத்துக்கு முன்பு ஸ்டென்ட் பொருத்தப்பட்டிருந்தது. அவரது வலது சிறுநீரகத்தில் 3.5 x 2.5 செ.மீ அளவுள்ள கல்லும், இடது சிறுநீரகத்தில் 2×1.5 செ.மீ கல்லும் இருந்தன. தற்போது, அவையிரண்டுமே அகற்றப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு நோயாளி நலத்துடன் இருக்கிறார்.
இன்றைய நிலையில், இரத்தக் கட்டிக்கான மருந்துகள், இரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகள் உட்கொள்வோர், கல்லீரல் நோயாளிகள், இயற்கையிலேயே பெரிய அளவிலான அசாதாரணமான சிறுநீரகங்கள் கொண்டோர் (அதிக இடர் கொண்ட அல்லது எவ்விதமான சிகிச்சையும் செய்ய முடியாது என்று கருதப்பட்டவர்கள்) ஆகியோருக்குக்கூட பெரிய அளவிலான சிறுநீரகக் கற்களை அகற்றுவதில் ஆர்.ஐ.ஆர்.எஸ் முறையில் சிகிச்சை தருவதில் மதுரை மாநகரிலேயே ஒரே மருத்துவமனையாக மீனாட்சி மிஷன் திகழ்கிறது.
நாட்டில் செயல்முறைகளில் 90%-க்கும் அதிகமான வெற்றிகரமான சிகிச்சை விகிதங்களை கொண்டிருக்கும் பெருமைமிக்க மருத்துவமனைகளுள் மீனாட்சி மிஷனும் ஒன்று. மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் யூராலஜி, ஆண்கள் நோயியல் பிரிவின் முதுநிலை மருத்துவ நிபுணர் மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர்.டி.பால் வின்சென்ட் தலைமையில் இந்த சமீபத்திய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
அவர் இதுகுறித்துப் பேசுகையில், ”ஆர்.ஐ.ஆர்.எஸ் சிகிச்சையில் பல படிநிலைகள் உண்டு. அதன்படி, நோயாளியின் சிறுநீரகத்தை நோக்கி யூரிட்டராச்கோப் எனும் நுண்ணிய-நெகிழ்தன்மையுடைய கருவி செலுத்தப்படும். இது சிறிய கேமரா, சிறு விளக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய மெலிதான சாதனம். இது, சிறுநீர்ப்பாதை, சிறுநீர்ப்பை வழியாக சிறுநீரகத்துக்கு செலுத்தப்படுகிறது.
அடுத்தபடியாக, ஒரு லேசர் மூலம் சிறுநீரகக் கல், சிறு துகள்களாக உடைக்கப்பட்டு, ஒரு சிறிய பை போன்ற அமைப்பின்மூலம் கவரப்பட்டு பின்னோக்கி இழுக்கப்பட்டு அகற்றப்படும். அல்லது துகள்கள் அனைத்தும் சிறுநீரின் வழியாகவே வெளியேறுமாறு செய்யலாம். வழக்கமாக ஆர்.ஐ.ஆர்.எஸ் முறையில் 2 செ.மீ வரை அளவுள்ள சிறுநீரகக் கற்களே அகற்றப்படும். ஆனால், சரியான நிபுணத்துவம் கொண்ட மருத்துவரால் பெரிய கற்களைக்கூட படிப்படியாக இம்முறையைப் பயன்படுத்தி அகற்ற முடியும்.
பொதுவாக இதய நோய், பக்கவாத நோயாளிகள் இரத்தத்தின் அடர்த்தியைக் குறைப்பதற்காக மருந்துகளை உட்கொள்வர். இவர்களுக்கும் கல்லீரல் செயல் இழந்த நிலையில் இருப்போர், மேலும், அசாதாரண நிலை சிறுநீரகங்களுடன் இருப்போர், இரத்த உறைதல் பிரச்சனையால் இரத்தக் கசிவு தொந்தரவைச் சந்திப்போர் ஆகியோருக்கு இந்த சிகிச்சை அளிக்கும்போது உயர்தர நிபுணத்துவம் தேவைப்படும்” என்றார்.
மேலும் அவர் பேசும்போது, ”ஆர்.ஐ.ஆர்.எஸ் முறையின் சிறப்பு என்னவென்றால், இதில் உடலைக்கீறி சிகிச்சை செய்யப்படுவதில்லை என்பதுதான். மேலும் இரத்தக் கசிவு, சிறிய தொந்தரவுகளுக்கான வாய்ப்பு இதில் மிகவும் குறைவு. இச்சிகிச்சை பெற்றவர், சிகிச்சை முடிந்த மறுநாளே பணிக்கு சென்றுவிடலாம். எனவே, இது வசதியான அதே நேரத்தில் உடலில் மிகக்குறைவான ஊடுருவலைச் செய்யக்கூடிய சிகிச்சை முறையாக இருக்கிறது” என்றார்.
சிறுநீரகக் கற்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது குறித்துப் பேசிய மருத்துவர் பால் வின்சென்ட் , ”சிறுநீரில் உள்ள சில அம்சங்கள் அடர்த்தியாக ஆகி, சிறு சில்லுகளாக மாறிவிடும். அவை, நாளடைவில் சிறுநீரகக் கற்களாக ஆகிவிடுகின்றன. இதனைத் தடுக்க வேண்டுமென்றால் தினசரி 2 லிட்டர் சிறுநீர் வெளியேற்றப்பட வேண்டும். அந்த அளவிற்கு சிறுநீர் கழிக்க வேண்டுமென்றால் குறைந்தது 3 லிட்டர் நீர் பருக வேண்டும். அசைவ உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் சிறுநீரகவியல் துறையின் தலைவரும் முதுநிலை மருத்துவர் ஆர்.ரவிச்சந்திரன், முதுநிலை நிபுணர், யூராலஜி துறை, ஆண்ட்ரோலாஜிஸ்ட் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்
டி.பால் வின்சென்ட், சிறுநீரகவியல் துறையின் முதுநிலை மருத்துவர் வேணுகோபால் கொனங்கி, மற்றும் மார்க்கெட்டிங் துறையின் பொது மேலாளர் சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.