கரூர் மாநகரின் மையப் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக் கோயில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அந்த திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
ஒரு மாதம் நடைபெறும் இந்த திருவிழா கடந்த 11ம் தேதி கம்பம் நடுதலுடன் துவங்கியுள்ளது. நாள்தோறும் சுவாமி திருவீதி உலா வந்த நிலையில் நாளை முதல் 3 நாட்கள் முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளது. அமராவதி ஆற்றிலிருந்து பக்தர்கள் கரும்பு தொட்டில், உருவாரம் எடுத்து வருதல், பால் குடம் போன்றவற்றை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

மேலும், கம்பத்திற்கு பால், தண்ணீர் ஊற்றுபவர்கள், விளக்கு போடுபவர்கள் சுமார் 1 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று ஊற்றி வருகின்றனர். இதனை முன்னிட்டு போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 28ம் தேதி புதன்கிழமை கம்பம் ஆற்றில் விடும் நிகழ்வை முன்னிட்டு கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.





