திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே தென்னம்பட்டியில் நேற்று மண் அள்ள தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் குளிக்கச் சென்ற நிஷாந்த் என்ற பள்ளி மாணவன் பலியானான்.
இதனை அடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிஷாந்தின் தந்தை சக்திவேல் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் புகார் அளித்தால் உங்களை கொலை செய்து விடுவோம் என்று மணல் மாபியாக்கள் தங்களை மிரட்டுவதாக இறந்த மாணவனின் உறவினர்கள் இன்று வடமதுரை காவல் நிலையம் முன்பு முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மாணவன் இறப்பிற்கு காரணமான கிராம நிர்வாக அதிகாரி, வட்டாட்சியர், கனிமவளத்துறை அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் என அனைவரும் வரவில்லை என்றால் உடலை வாங்க மாட்டோம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நான்கு ஆள் உயரத்திற்கு மேல் தோண்டி மண் அள்ள அனுமதி கொடுத்த அரசு அதிகாரிகள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.