சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் .1993 ஆம் ஆண்டு காவலராக சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எஸ்ஐ பதவி உயர்வு பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காளையார் கோவில் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பொறுப்பேற்ற ராஜ்குமார் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு காளையார் கோவிலில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

நேற்று இரவு வீட்டில் இருந்தவர் பிற்பகல் வரை அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்த பொழுது சீருடை அணிந்தபடியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கயிற்றில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். ராஜ்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா? என காளையார் கோவில் ஆய்வாளர் சந்திரபோஸ் தலைமையிலான போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
அவரது உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காளையார் கோவிலில் சார்பு ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவலர்கள் மத்தியில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ராஜ்குமார் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுது உறைந்து போயினர்.
ராஜ்குமார் ஏற்கனவே திருப்பத்தூர் அருகே உள்ள கீழச்சேவல்பட்டியில் பணியாற்றியுள்ளார். தற்போது விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்தும் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மகன் மதன்குமார் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது முதல் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.