சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ். கோட்டை அருகே மல்லாக்கோட்டை பகுதியில் இயங்கி வந்த கல்குவாரியில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையாலும் பாறையை உடைக்கும் போது ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிலச்சரிவில் சிக்கிய 6 பேரில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 4 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்றொரு தொழிலாளரின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மைக்கேல் என்பவர் பலத்த காயங்களுடன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்தவுடன், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருவதாகத் தெரிவித்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உடன் இருந்தனர்.
உயிரிழந்தவர்களில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜித் மற்றும் ஓடைப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், கணேஷ், ஆறுமுகம் மற்றும் ஆண்டிச்சாமி ஆகியோர்உயிரிழந்ததாக கூறப்படுகிறது மேலும்
குவாரி பகுதியில் இறந்தவர்களை பார்வையிட உறவினர்களை அனுமதிக்கவில்லை
இதையடுத்து, போலீசாருக்கும் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பான நிலை ஏற்பட்டது.