• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா..,

ByAnandakumar

May 17, 2025

கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்வதும், பிறகு அந்த கம்பத்தினை ஆற்றில் விடும் நிகழ்வும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

அந்தவகையில் இந்த ஆண்டு கடந்த 11-ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. அதன் பிறகு தினமும் பக்தர்கள் புனிதநீர், பால் மூலம் கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் விழா இன்று நடைபெற்றது. ஸ்ரீ மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பூச்சொரிதல் விழாவையொட்டி கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அம்மனுக்கு பூத்தட்டு கொண்டு வந்து வழிபடுவது வழக்கம். அந்தவகையில் இன்று இரவு கரூர், வெங்கமேடு, தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், காந்திகிராமம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் இருந்து 48 பூத்தட்டுகள் கொண்டு வந்தனர்.

அவர்கள் தங்களது பகுதியில் இருந்து அம்மனை அலங்கரித்து ரதத்தில் வைத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். ரதத்தினை பின்தொடர்ந்தபடியே பக்தர்கள் அம்மனை மனமுருகி வேண்டியபடி பூத்தட்டுகளுடன் நடந்து வந்தனர். அப்போது ரதத்திற்கு முன்பாக வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டு, இசை வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அம்மன் ரதங்களுடன் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்த பூத்தட்டு ஊர்லமானது வரிசையாக கரூர் மாரியம்மன் கோவிலை அடைந்ததும் சிறப்பு பூஜை செய்யப்பட்டன. அப்போது பக்தர்களால் கொண்டு வரப்பட்ட பூக்கள் அம்மனுக்கு படைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கரூரில் நடந்த பூச்சொரிதல் விழாவையொட்டி பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டன.
முக்கிய வீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வருகின்ற 28-ஆம் தேதி கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர்.