திருமணத்திற்காக வெளியே சென்றவர்களின் வீட்டில் திருட்டு. தொடர் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டனர். மேலும், இரு வழக்குகளில் களவாடிய நகை மற்றும் பணம் பறிமுதல் செய்தனர்.
கோவை, பேரூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் உமாசங்கர் (வயது 59) என்பவர், தனது மகளின் திருமணத்திற்காக 2ம் தேதி அன்று வீட்டை பூட்டி விட்டு சென்று இருந்தார். பின்னர் திரும்பி வந்த போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 12 சவரன் தங்க நகைகள், 878 கிராம் வெள்ளி மற்றும் ரூ.1,00,000/- பணம் காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் பேரூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், விசாரணை சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. தீவிர விசாரணையின் போது, பேரூர் பகுதியில் வசிக்கும் சந்தானம் (வயது 28) இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது. சந்தானத்தை கைது செய்த காவல் துறையினர், மேலே குறிப்பிடப்பட்ட திருட்டு சொத்துகளை அவரிடம் இருந்து பறிமுதல் செய்து உள்ளனர்.

மேலும் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், சந்தானம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய திருட்டு வழக்குகளிலும் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. அந்த வழக்குகளில் திருடிய 20 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. குற்றவாளிடம் இருந்து 3 வழக்குகளில் தொடர்புடைய சுமார் 32 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 27 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.