கண்ணகி கோவிலில் சித்திரை முழுநிலவு விழா. சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து தமிழக வனப்பகுதி வழியே பாதை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்படும். அமைச்சர் சேகர்பாபு தகவல் தமிழக கேரள எல்லைப்பகுதியான, மங்கலதேவி மலையில் உள்ள சரித்திர புகழ்பெற்ற கண்ணகி கோவிலில் சித்திரை முழுநிலவு விழா, மங்கலதேவி கண்ணகிவிழா, பூமாரிவிழா என முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.

விழாவில் ஆயிரக்கணக்கான இரு மாநில பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தமிழக வனப்பகுதி வழியே கண்ணகி கோவிலுக்குச் செல்ல பாதை அமைக்க சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து பணிகள் மேற்கொள்ளப்படும் என இன்று கோவிலுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இரண்டாயிரம் ஆண்டு பழமையும், சரித்திரப்புகழும் வாய்ந்த கண்ணகி கோவில், தேனிமாவட்டம் கூடலூருக்கு தெற்கே உள்ள வண்ணாத்திப்பாறையில், தமிழக கேரள எல்லைப்பகுதியான, மங்கலதேவி மலையில் புலிகள் சரணாலயப்பகுதியில் 4830 அடி உயரத்தில் உள்ளது. சேரன் செங்குட்டுவன் கட்டிய இக்கோவில் சிதிலமடைந்ததால், பின்னாளில் சோழப்பேரரசன் முதலாம் இராஜராஜன் தன்ஆட்சிகாலத்தில் (கி.பி. 985&1014) சோழர் கலைப்பாணியில் இக்கோவிலை மீட்டமைத்துள்ளான். சிறப்பு மிக்க இக்கண்ணகி கோவிலில் இன்று சித்திரை முழுநிலவு விழா நடைபெற்றது.
இத்திருவிழாவினை தேனி மாவட்டத்திலுள்ள பக்தர்கள் வழிபாடு செய்யும் விதமாக தமிழக அரசு தேனி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளித்தும் மற்றும் தமிழக மற்றும் கேரள மாநில வருவாய்த்துறை, வனத்துறை, காவல்துறை மற்றும் பிற துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடு பணிகள் கூட்டம் நடத்தி திருவிழாவின் போது பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

விழாவை முன்னிட்டு காலை ஆறு மணியிலிருந்தே தமிழக வனப்பகுதியான பளியன்குடி வழியாகவும், கேரள வனப்பகுதியான குமுளி கொக்கரக்கண்டம் வழியாகவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாகவும், கேரள வனப்பகுதி வழியாக ஜீப்புகளிலும் மலை உச்சியிலுள்ள கோவிலுக்கு சென்றனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் கோவில் இருப்பதால், கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இருமாநில அரசுகள் சார்பாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
பளியங்குடியில் தமிழக போலீஸ் மற்றும் வனத்துறையின் சோதனை இருந்தது. புகையிலை, சிகரட் போன்ற போதை பொருட்கள், பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கொக்கரக்கண்டம் பகுதியில் கேரள வனத்துறையினர் மற்றும் போலீசார்கள், ஆண்பெண் பக்தர்களை மெட்டல் டிடக்டர் சோதனைக்குப் பிறகே கோவிலுக்கு செல்ல அனுமதித்தனர்.
கோவிலில் தமிழ் மற்றும் மலையாள மொழியில் பூஜை நடைபெற்றது. அம்மன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நடைபயண பக்தர்களின் வசதிக்காக கம்பத்திலிருந்து கம்பம்& கூடலூர் வழியாக பளியன்குடிக்கு சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தது. இன்று நடைபெற்ற சித்திரை முழு நிலவு திருவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டார்.
அவர் கூறுகையில், மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சித்ராபௌர்ணமி அன்று தமிழக-கேரள மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சேர மன்னரால் தோற்றுவிக்கப்பட்ட இத்திருக்கோயிலை முழுவதுமாக புனரமைத்து, பக்தர்கள் வருகின்ற பாதையையும் சீரமைத்து ஆண்டுக்கு ஒருமுறை தரிசனம் என்று இல்லாமல் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று இக்கோயிலில் வழிபாடு செய்வதற்கு தமிழ்நாடு அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இரு மாநில பக்தர்களின் நலன் கருதி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, கண்ணகி கோயில் சீரமைப்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்கும், இரு மாநில அறநிலையத்துறை அமைச்சர்கள் சந்தித்து பேசுவது தொடர்பாகவும், மேலும், ஐயப்பன் கோயிலுக்கு செல்கின்ற பக்தர்களின் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைப்பதற்கும், அவ்விடத்தை பராமரிப்பதற்கும் அனுமதி கோரி, சமீபத்தில் கேரளா மாநில முதல்வர் அவர்கள் சென்னைக்கு வருகை தந்தபோது, நேரில் சந்தித்து கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் மாதந்தோறும் தரிசனம் செய்ய ஏதுவாக, திருக்கோயிலுக்கு செல்லும் பாதையினை சீரமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விரைவாக மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். எனவே, இனிவருகின்ற காலத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்கு அதிக அக்கறை எடுத்துக்கொண்டு, பக்தர்கள் எளியமையாக தரிசனம் செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,
இன்றைய தினம் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 25,000 பக்தர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தரிசனம் முடிந்து செல்லும் பக்தர்களுக்கு குமுளியில் உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனபாதுகாவலர் மற்றும் துணை இயக்குநர் ஆனந்த், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்திக், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது, துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம், வட்டாட்சியர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.





