கோவை லாலி ரோடு அன்பகம் வீதியைச் சேர்ந்த சந்திரன் இவர் வீட்டில் வளர்ப்பு நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்த நாய் அப்பகுதியில் உள்ள தெருக்களில் சுற்றி திரிந்து வந்தது.
மேலும் அந்த நாய்க்கு முறையான தடுப்பூசிகள் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை அடுத்து அப்பகுதியில் ஒர்க்ஷாப்பில் தொழிலாளியாக பணியாற்றி வந்த சீரநாயக்கன்பாளையம் பகுதி சேர்ந்த யுவராஜ் என்பவரை சந்திரன் வளர்த்து வந்த நாய் கடித்து உள்ளது. அதனைப் பார்த்து அவர் அதனை தடுக்க முயன்ற போது, சந்திரனையும் அந்த நாய் கடித்து உள்ளது. இருவரும் படுகாயம் அடைந்து, ரத்தம் வழிந்து உள்ளது.
உடனடியாக இதுகுறித்து ஹீமேம் அனிமல் சொசைட்டி என்ற விலங்குகள் அமைப்பினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. படுகாயம் அடைந்த யுவராஜ் மற்றும் சந்திரன் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். இதைத் தொடர்ந்து விலங்குகள் அமைப்பினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் சந்திரன் வளர்த்து வந்த நாயை பிடித்து சென்றனர்.
இந்நிலையில் அந்த நாய் சிறிது நேரத்தில் உயிரிழந்தது. நாயை உடற்கூறு ஆய்வு செய்தனர். அப்பொழுது நாய்க்கு ரேபிஸ் நோய் தொற்று இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனைக்குச் சென்ற யுவராஜ் மற்றும் சந்திரனிடம் தெரிவித்து மருத்துவர்களிடம் தகவல் தெரிவித்து உள்ளனர். ஐந்து நாட்கள் இடைவெளியில் 5 ஊசிகள் போட வேண்டும் என மருத்துவர்கள் யுவராஜ் மற்றும் சந்திரனுக்கு அறிவுறுத்தி உள்ளனர். இதனை அடுத்து லாரி ரோடு பகுதியில் உள்ள நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் முயற்சியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.








