மதுரையில் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக வைகைஅணையில் இருந்து நேற்று மாலை தண்ணீர் திறக்கப்பட்டது. கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதால் யாரும், ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்று நீர்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் ஜீவாதாரமாக வைகை அணை உள்ளது. இங்கிருந்து பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்காக நீர் அவ்வப்போது திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவின் ஒருபகுதியாக வரும் 12-ம்தேதி அழகர் ஆற்றில் இறங்குகிறார். இதனைத் தொடர்ந்து நீர் மதுரைக்கு சரியான நேரத்தில் சென்றடையும் வகையில் இன்று மாலை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
தற்போது வைகை ஆறு வறண்டு உள்ளது. ஆகவே திறக்கும் நீர் மணற்பரப்புகளில் வெகுவாய் உறிஞ்சப்பட்டு விடும் என்பதால், மாலை நேரத்தில் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று ஆயிரம் கனஅடிநீர் திறக்கப்பட்டு, பின்பு படிப்படியாக குறைக்கப்பட உள்ளது. வரும் 12-ம் தேதி வரை மொத்தம் 216மில்லியன் கனஅடிநீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அணைநீர் தற்போது 55.27அடியாகவும் (மொத்த உயரம் 71). நீர்வரத்து விநாடிக்கு 25கனஅடியாகவும் உள்ளது. குடிநீர் திட்டங்கள் உட்பட மொத்தம் ஆயிரத்து 72கனஅடி நீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையில் இருந்து திறக்கப்படும் நீர் பாசன வாய்க்கால் மற்றும் ஆறு என்று இரண்டு வழிகளில் மதுரைக்கு செல்வது வழக்கம். தற்போது ஆற்றின் வழியே திறக்கப்பட்டுள்ள நீர் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களை கடந்து செல்ல உள்ளது. ஆகவே இப்பகுதியைச் சேர்ந்த கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றுக்குள் யாரும் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்ற நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆற்றின் வழியே செல்லும் நீரினால் வழிநெடுகிலும் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளிலும் நீர்சுரப்பு அதிகரித்துள்ளது. இதனால் பல உள்ளாட்சிகளின் குடிநீர் தட்டுப்பாட்டுக்கும் தீர்வு ஏற்பட்டுள்ளது.
மதுரை சித்திரை விழாவின் ஒருபகுதியாக அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக நேற்று மாலை வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது.