மதுரை மாவட்டம் அழகு நாச்சியார்புரத்தைச் சேர்ந்த முத்து கருப்பி (30) மற்றும் அவரது கணவர் குமார் (26), கடந்த மூன்று ஆண்டுகளாக வேலையின்மை காரணமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கிளாதரி ஊராட்சிக்குட்பட்ட கக்கினியார்பட்டியில் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

தினசரி கூலி வேலைக்குச் சென்று கிடைக்கும் பணத்தில் குடும்ப செலவுகளுக்குப் பின்பாக சிறு தொகைகளை சேமித்து வந்த இத்தம்பதிகள், தங்கள் மூன்று பிள்ளைகளின் (இரு மகள்கள், ஒரு மகன்) காதணி விழாவை நடத்தும் கனவுடன், அந்த பணத்தை தகர உண்டியலில் சேமித்து வந்தனர்.
அந்த பணத்தை பாதுகாப்பாக வைக்க, தகர உண்டியலை வீட்டுக்குள் குழி தோண்டி புதைத்து வைத்திருந்தனர். சில மாதங்களுக்கு முன் உண்டியலை தோண்டி எடுத்து எண்ணியபோது, ரூ.1 லட்சம் வரை இருப்பதை அறிந்து மேலும் பணம் சேமிக்க வேண்டும் என எண்ணி, மீண்டும் புதைத்து வைத்தனர். சமீபத்திய மழையால் தகர பாக்ஸ் சேதமடைந்து, கரையான் உள்ளே புகுந்து ரூ.500 நோட்டுகளை முழுமையாக சேதப்படுத்தியதைக் கண்டதும், குடும்பமே கலங்கிப்போய்க் கதறி அழுதது.
வங்கிக்கு சென்று உதவிக்காக முறையிட்டபோது, வங்கி அதிகாரிகள் “இது கிழிந்த நோட்டு அல்ல; கரையான் சாப்பிட்டதால் பரிமாற்ற முடியாது” என தெரிவித்தனர். தகவல் மாவட்ட நிர்வாகத்திற்குத் தெரிய வந்ததும், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உடனடி உத்தரவின்படி தாசில்தார் சிவராமன் மற்றும் முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன் குமார் முத்து கருப்பியை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர்.
வங்கிக் கொள்கைகள் படி, ரிசர்வ் வங்கி விதிமுறைகள் இந்த நோட்டுகளுக்கு மதிப்பில்லை எனக் கூறினாலும், கூலி வேலை செய்து சேமித்த பணம் இவ்வாறு அழிந்தமைக்கு கருணையின் அடிப்படையில் உதவியளிக்க பரிசீலனை செய்யப்படும் என ஆர்பிஐ அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதற்காக முத்து கருப்பி சென்னையில் உள்ள ஆர்பிஐ தலைமையகத்துக்கு செல்ல வேண்டும் என்றும், அங்கு நோட்டுகளை நேரில் பரிசோதனை செய்தபின் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.