பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் மகளிர் விளையாட்டு விடுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பாக பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்ட பாரத ரத்னா எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானம் மற்றும் அரசு விளையாட்டு மாணவியர் விடுதியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டுத் நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் 05.05.2025 அன்று நேரில் ஆய்வு செய்தார்.
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பல்வேறு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்தியும், புதிய விளையாட்டு வீரர், வீராங்கனைகளையும் உருவாக்கி விளையாட்டு துறையை இந்திய அளவில் முதன்மை இடத்திற்கு கொண்டு செல்லும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.
மேலும் விளையாட்டு அரங்கத்திற்கான கட்டமைப்புகள் மற்றும் இதர செயல்பாடுகளுக்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்து விளையாட்டுத்துறையை மேம்படுத்தி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியதன் அடிப்படையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், மாணவியர் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.
அதனடிப்படையில், நீச்சல் குளம் முழுவதும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 3 எண்ணிக்கையிலான புதிய மோட்டார் மற்றும் நீர் சுத்திகரிப்பு மோட்டார்கள் பொருத்தப்பட்டள்ளதையும், டேக்வோண்டோ விளையாட்டிற்கு தரைதள ஆடுகள விரிப்புகள் மற்றும் விடுதியில் மாணவியர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் வைத்துக் கொள்வதற்கான அலமாரிகள், விடுதி அறை கதவுகள், விடுதி ஜன்னல்களில் கொசு வலை அமைத்தல், கழிவு நீர் வாய்க்கால்களில் புனரமைப்பு பணிகள், விடுதி முழுவதும் வண்ணம் பூச்சு பணிகள் உள்ளிட்ட என தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு பணிகளையும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் 05.05.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விடுதி மற்றும் விளையாட்டு மைதான அரங்குகளையும் நீச்சல் குளத்தினையும் முறையாக பராமரித்திட மாவட்ட விளையாட்டு நல அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் இரா. பொற்கொடி வாசுதேவன், தடகள பயிற்றுநர் செல்வி. மோகனா, டேக்வாண்டோ பயிற்றுநர் து.பரணிதேவி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.