உலக அளவில் வருடம் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெறிநாய் கடியால் இறப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நாய்களுக்கு வருடம் தோறும் தடுப்பூசி போடப்பட்டு வருவதால் இதன் விகிதாச்சாரம் குறைந்து வருகிறது.

பழனிக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் இன்று சிறப்பு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி துவக்கி வைத்தார். ஏராளமான பொதுமக்கள் தங்கள் செல்லப்பிராணியான நாய் மற்றும் பூனைகளை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும், இரண்டு வாகனங்களில் கால்நடை மருத்துவர்கள், உதவியாளர்கள் மற்றும் நாய் பிடிப்பவர்கள் தெருக்களுக்கே நேரில் சென்று அங்குள்ள வீடில்லா நாய்களை பிடித்து வெறிநோய் தடுப்பூசி போடும் நிகழ்ச்சியும் துவக்கி வைக்கப்பட்டது.
சிறப்பு முகாமில் நூற்றுக்கணக்கான நாய் மற்றும் பூனைகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. தவிர சத்து மருந்து மற்றும் சத்து மாத்திரைகள், டானிக் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு கால்நடை மருத்துவத்துறை உதவி இயக்குனர் மருத்துவர் சுரேஷ், நகராட்சி நகர்நல அலுவலர் மனோஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.