நாகையில் திமுக நிர்வாகி கடையை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சூறையாடின. பேரணியின் போது, குடிநீர் பாட்டிலுக்கு காசு கேட்டதால் தகராறு ஏற்பட்டது. வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரிதிடலில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பரமு என்பவருக்கு சொந்தமான டீக்கடை உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. அப்போது டீக்கடையில் குடிநீர் பாட்டில் வாங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிலர் பணம் கொடுக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. குடிநீர் பாட்டிலுக்கு பணம் கேட்ட பொழுது டீக்கடையில் இருந்த ஊழியர்களுக்கும் விசிக-வினருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த விசிகாவினர் டீக்கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்திவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த ஊழியர்கள் நாகப்பட்டினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த வெளிப்பாளையம் போலீசார் ஒருவரை கைது செய்து, இதில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர். நாகையில் கூட்டணி கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.