புதுடெல்லி: பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தினால் இந்தியா அதற்கு ஈடாக பெரும் விலை கொடுக்க நேரிடும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் இந்தியா பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிக்கிறது என்று எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்றும், அவ்வாறு நடந்தால் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் குவாஜா ஆசிஃப் கூறியிருந்தார். “ஆயுதமற்ற அப்பாவி மக்களைத் தாக்குவது எங்கள் கொள்கை அல்ல. இதில் பாகிஸ்தானுக்கு எந்தப் பங்கும் இல்லை. இந்தியாவில் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படும் மக்கள் அரசாங்கத்தின் அல்லது காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் எடுத்தால், அதற்கு பாகிஸ்தானைக் குற்றம் சாட்டுவது எளிது,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்குப் பிறகு பாகிஸ்தானும் தனது நிலைப்பாட்டை கடுமையாக்கியுள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. நாட்டைப் பாதுகாக்க இராணுவம் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள பாகிஸ்தான் தற்போது எல்லைகளில் பாதுகாப்புப் படைகளை குவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக இந்தியா மத்திய செக்டாரில் பெரிய அளவிலான விமானப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது.