திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரையில் உள்ள நால்ரோடு பகுதியில் திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் தனியாருக்கு சொந்தமான பேக்கரி மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் கடை செயல்பட்டு வருகிறது.
இன்று பேக்கரி செயல்பட்டுக் கொண்டு இருந்த போது, சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது. இதனைக் கண்ட கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் பேக்கரியில் இருந்து தப்பி ஓடினர்.

அதனைத் தொடர்ந்து பேக்கரி ஊழியர்கள் தீயணைப்பான் கருவியைக் கொண்டு நெருப்பை அணைக்க முயன்றனர். ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தீ மள மளவென பற்றி பேக்கரி கடை முழுவதும் பரவியது.
இதில் பேக்கரிக்குள் இருந்த சேர், டேபிள் உள்ளிட்ட பொருட்களில் தீ பற்றி கரும்புகையுடன் தீ கொழுந்துவிட்டு பயங்கரமாக எரியத் தொடங்கியது. மேலும் பேக்கரிக்கு எதிரே நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் ஒன்றும் முழுவதுமாக தீ பற்றி எரிந்து சாம்பல் ஆனது.
தீ விபத்தின் போது பேக்கரிக்குள் இருந்த கேஸ் சிலிண்டர் ஒன்று டமார் என்ற பயங்கர சட்டத்துடன் வெடித்ததால் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.
மேலும் இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்புத்துறையில் இருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அதற்குள் பேக்கரி கடையில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமாகியது.
ஊரின் முக்கிய பகுதியில், சுற்றிலும் ஏராளமான கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ள பகுதியில் பேக்கரி கடை தீப்பற்றி எரிந்த சம்பவத்தை அறிந்து ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியதால் பரபரப்பான சூழல் நிலவியது.