பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வலுக்கு நாடு அஞ்சலி செலுத்தியது.
புது தில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வலுக்கு நாடு அஞ்சலி செலுத்தியது. அவரது மனைவி ஹிமான்ஷி கண்ணீருடன் விடை கொடுத்தார். உயர்மட்ட கடற்படை அதிகாரிகள் அவரது உடலுக்கு டெல்லி விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தினர். டெல்லி முதல்வர் ரேகா குப்தா உடலை பெற்றுக்கொண்டார்.
முதலில் கதறி அழுத வினய் நர்வலின் மனைவி ஹிமான்ஷி, பின்னர் ‘ஜெய்ஹிந்த்’ என்று முழக்கமிட்டு அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார். ‘வினய் எப்போதும் என் இதயத்தில் வாழ்வார்’ என்றும் ஹிமான்ஷி கூறினார்.

வினயின் உடலைப் பெறும் ஹிமான்ஷியின் காட்சி அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது. இன்னும் சிறிது நேரத்தில் உடல் அவரது சொந்த ஊரான ஹரியானாவுக்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்படும். வினய் நர்வலின் உடலுக்கு அருகில் அமர்ந்திருக்கும் ஹிமான்ஷியின் படங்கள் நேற்று சமூக ஊடகங்களில் பரவியது. அந்த படம் பயங்கரவாத தாக்குதலின் கொடூரத்தை உணர்த்தியது. தேனிலவு கொண்டாட ஹிமான்ஷியுடன் காஷ்மீர் சென்ற வினய் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். இருவருக்கும் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி திருமணம் நடந்தது. கொல்லப்பட்ட வினய் கொச்சியில் கடற்படை அதிகாரியாக இருந்தார்.