பழனி முருகன் கோயிலுக்கு பேட்டரி கார் பக்தர் போத்திராஜ் நன்கொடையாக வழங்கினார். மலையடிவாரத்தில் சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டது.
பழனி முருகன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் விலையில்லா பேட்டரி கார்கள், பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் பேட்டரி கார்கள், பேட்டரி பேருந்துகளை பயன்படுத்தி கிரிவலப் பாதையில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் முருக பக்தரும், தொழிலதிபருமான போத்திராஜ் என்பவர் 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரி பேருந்தை பழனி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கினார். மலையடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோயில் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன் பேருந்து பெற்றுக் கொண்டார். பின்னர் தொழிலதிபர் போத்திராஜ் பேட்டரி வாகனத்தை இயக்கி அதன் சேவையை துவக்கி வைத்தார். ஒரே நேரத்தில் 22 பேர் அமைந்து செல்லக்கூடிய வகையில் பேருந்து வடிவமைக்கப்பட்டிருந்தது. பேட்டரி வாகனத்தில் பக்தர்கள் ஆர்வமுடன் பயணம் செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து பழனி கோயில் கிரிவலப் பாதையில் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனை அடுத்து கோயில் நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காக விலையில்லா பேட்டரி கார், பேருந்து உள்ளிட்டவற்றை இயக்கி சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.