புதுச்சேரியில் தங்கும் விடுதி ஊழியரின் ரூ.2 லட்சம் மதிப்பிலான யமாஹா வாகனத்தின் மீது அமர்ந்து, காலால் உதைத்து ஹாண்டில் பார் பூட்டை உடைத்து வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி பதிவாகி இருந்தது.
புதுச்சேரி முருங்கப்பாக்கம் துலகாத்தம்மன் நகரை சேர்ந்தவர் பரத் (22). இவர் நகர பகுதி ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 8 ஆம் தேதி அன்று இரவு பணிக்கு விடுதிக்கு தனது 2 லட்ச ரூபாய் மதிப்பிலான யமாஹா r 15 வாகனத்தில் சென்று அதனை விடுதி எதிரே நிறுத்தி விட்டு, உள்ளே சென்றவர் 11 மணியளவில் உணவு சாப்பிட செல்லலாம் என வெளியே வந்து பார்த்த போது, அவரது இருசக்கர வாகனம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியை பார்த்த போது, 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்குமிங்கும் நோட்டமிட்டு பின்னர் அவரது வாகனத்தின் மீது அமர்ந்து காலால் ஹாண்டில் பாரின் சைட் லாக்கை உடைத்து வாகனத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதனை அடுத்து அக்காட்சிகளை கொண்டு பரத் பெரிய கடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தை திருடி சென்றவரை தேடி வருகின்றனர். மேலும் இந்த மாதம் மட்டும் புதுச்சேரி நகர பகுதியில் 10 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் திருடப்பட்ட நிலையில் திருட்டில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்ய தினரி வருவது குறிப்பிடத்தக்கது.