• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குறுந்தொகைப் பாடல் 58

Byவிஷா

Apr 22, 2025

இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக
நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே.

பாடியவர்: வெள்ளி வீதியார்.
பாடலின் பின்னணி:
தலைவிமீது தலைவன் தீராத காதலுடன், தான் செய்யவேண்டிய செயல்களையும் தன் கடமைகளையும் மறந்து எப்பொழுதும் தலைவி நினைவாகவே இருக்கிறான். தலைவனின் தோழன், “நீ இந்தக் காம நோயைப் பொறுத்துக்கொண்டு உன் கடமைகளைச் செய்வதுதான் சிறந்தது.” என்று தலைவனைக் கடிந்துரைக்கிறான். அதற்கு மறுமொழியாகத் தன் நிலைமையைத் தலைவன் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
பாடலின் பொருள்:
என்னைக் கண்டித்துரைக்கும் நண்ப! என்னுடைய குறையாக நீ கருதும் என் காமநோயை என்னால் தடுத்து நிறுத்த முடிந்தால் மிகவும் நன்றுதான். அதுவே என் விருப்பமும் ஆகும். கதிரவனின் வெயில் அடிக்கும் நேரத்தில் வெம்மையான பாறையிடத்தே, கையில்லாத ஊமை ஒருவன் கண்ணால் பாதுகாக்க முயலும், உருகிய வெண்ணெயைப் போல் இந்த காமநோய் என்னிடம் பரவியுள்ளது. அது பொறுத்துக்கொள்வதற்கு அரிதாக இருக்கின்றது.