வைத்தீஸ்வரன் கோவிலுக்கு 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளுடன் பழமை மாறாத நகரத்தார்களின் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோயில் குலதெய்வ வழிபாடு நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் தேவாரப் பாடல்பெற்ற ஸ்ரீ தையல்நாயகி அம்மன் சமேத வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இத்தலத்தில் செல்வமுத்துக்குமர சுவாமியும், நவகிரகங்களில் செவ்வாய் பகவானும் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இரண்டாவது செவ்வாய்கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக காரைக்குடி, , சிவகங்கை, பரமகுடி, மானாமதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோயிலுக்கு போவது வழக்கம்.
குலதெய்வ வழிபாடாகவும் அதே சமயம் ஸ்ரீதையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி மக்கள் சீர்வரிசை பொருள்களை 50 கூண்டு வண்டிகளில் ஏற்றி நடைபயணமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தாங்கள் வேண்டுதலுக்காகவும் வழிநடைக்கு துணையாகவும் கொண்டு வந்த மஞ்சள் தடவிய கம்புகளை பக்தர்கள் எடுத்து செல்கின்றனர்.
இந்த ஆண்டும் செட்டிநாடு கிராமங்களில் இருந்து, புதுக்கோட்டை கீழ ராஜ வீதி வழியாக தஞ்சாவூர் சாலையில் பழமை மாறாமல் பாரம்பரியத்துடன் சென்ற நகரத்தாரர்களின் 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் ரயில் வண்டி போல சென்றது. பொதுமக்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
மாட்டு வண்டிகள் தொடர்ச்சியாக சென்றதால் அந்தப் பகுதி வழியாக சென்ற பஸ் கார் லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஊர்ந்தபடியே மாட்டு வண்டிகள் செல்வதை வேடிக்கை பார்த்தபடி பொதுமக்கள் சென்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

மேலும் பாதயாத்திரை சென்ற நகரத்தார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்களுக்கு அந்தப் பகுதியில் ஏராளமானோர் தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர் பிஸ்கட் பழங்கள் மருந்து பொருட்கள் ஆகியவைகளை தொடர்ச்சியாக வழங்கிய வண்ணம் இருந்தனர்
இந்த நாகரிகாலத்திலும் பழமை பண்பாடு மாறாத நகரத்தாரர்களின் வைத்தீஸ்வரன் கோயில் பயணம் காண்போருக்கு மகிழ்ச்சியாகவும் படிப்பினையாகவும் இருந்தது