பழனியில் கணிதத்தில் உலக சாதனை படைத்த சிறுவன்- பெருக்கல் கணக்குகளுக்கு அபாக்கஸ் முறையில்லாமல் மனக் கணித முறையில் வேகமாக சரியான விடையளித்து சாதனை- சோழன் புக்ஆப் ரெக்கார் உலக சாதனையாக பதிவு செய்துள்ளது- செயற்கை நுண்ணறிவிற்கே சூளுரைக்கும் இயற்கை நுண்ணறிவாளன் என்ற பட்டம் வழங்கி பாராட்டு.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் வசித்துவரும் கணித ஆசிரியர்களான கணேசன் மற்றும் பிரதீபா தம்பதியரின் இரண்டாவது மகன் அபினவ் பிரத்யூஷ், சிறு வயது முதலே கணக்குகளைத் தீர்ப்பதில் அதிக ஆர்வமுடன் இருந்துள்ளார். அபினவ். எத்தனை எண்களைக் கொண்ட கணக்குகளைக் கொடுத்தாலும் மிகவும் இலகுவாக அவற்றிற்கு விடையளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவருகிறார்.
மேலும், இவருடைய திறனை உலக சாதனையாகப் பதிவு செய்ய நினைத்த மாணவன் கல்வி கற்று வரும், பழனியில் அமைந்துள்ள அக்சயா அகாடமி கேம்பஸ் பள்ளி நிர்வாகம் இன்று அதற்கான நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் நடத்தினர். இதன்போது சாதனை மாணவன் சமவாய்ப்பு முறையில், ஈரிலக்க எண்ணை ஈரிலக்க எண்ணால் பெருக்குதல் என்ற அடிப்படையில் (5 நிமிடத்தில் 58) கணக்குகளுக்கு சரியாக பதிலளித்தார்.
ஈரிலக்க எண்ணின் கனத்தை கண்டுபிடித்தல் என்ற அடிப்படையில் 20
கணக்குகளுக்கு 1 நிமிடம் மற்றும் 21 நொடிகளில் சரியாக விடையளித்தார்.
மூவிலக்க எண்ணின் வர்க்கத்தை கண்டுபிடித்தல் என்ற அடிப்படையில்
2 நிமிடங்களில் 10 கணக்குகளுக்கு விடையளித்தார். பிறந்த தேதி கூறினால் பிறந்த கிழமை கண்டுபிடித்தல் என்ற அடிப்படையில் 3 நிமிடங்களில் 20 பிறந்த நாட்களுக்கு நாள் குறிப்பிட்டார்.
ஐந்திலக்க எண்ணை ஐந்திலக்க எண்ணால் பெருக்குதல் என்ற அடிப்படையில்
5 நிமிடங்களில் 10 கணக்குகளுக்கு சரியாக தீர்வெழுதினார். மாணவனின் முயற்சியை முறைப்படி பரிசோதனை செய்த நடுவர்கள் உலக சாதனையாகப் பதிவு செய்தனர்.
உலக சாதனை படைத்த மாணவனுக்கு சான்றிதழ், நினைவுக் கேடயம், தங்கப் பதக்கம், அடையாள அட்டை போன்றவை வழங்கிப் பாராட்டப்பட்டது. உலக சாதனை படைத்த மாணவனை பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர் மற்றும் நண்பர்கள் பாராட்டினர். இதுபோன்று அபார திறமை உள்ள குழந்தைகளை அரசு ஊக்கப்படுத்தி பாராட்ட வேண்டும், மேலும் தனி கவனம் செலுத்தி அரசு சார்பில் சிறப்பு பள்ளி அமைத்து பயிற்சி அளிக்க வேண்டும் என குழந்தையின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.