திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் தனியார் சைசிங் நிறுவனம் 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இந்நிறுவனம் மூன்று மாதங்களுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் 300-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குவதால் அதிக அளவிலான ஒலி மாசு ஏற்படுவதாகவும், இதனால் நள்ளிரவில் தூங்க முடியாமல் குழந்தைகள் சிரமப்படுவதாகவும், பூகம்பம் வராமலேயே நில அதிர்வை ஒவ்வொரு நாளும் உணர்வதாகவும், இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகையினால் சுவாசக்கோளாறு, மூச்சு திணறல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து காவல் நிலையத்திலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி இன்று அப்பகுதி மக்கள் பள்ளி குழந்தைகளுடன் முகக் கவசம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் இப்பகுதியில் உள்ள அனைத்து பொது மக்களையும் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.