திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கேகே பிரியாணி என்ற தனியார் கடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று (07.04.25) அதிகாலை பழனி பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் கேகே பிரியாணி கடைக்கு சென்று நோட்டமிட்டுள்ளார். பின் வெளியே வந்த கடைக்கு எதிரே இருந்து கொண்டு தனியார் பிரியாணி கடைஉரிமையாளருக்கு போன் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பேசுவதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். இதனை அடுத்து 5 நிமிடம் காத்திருக்கவும் என ஹோட்டல் உரிமையாளர் கூறியுள்ளார்.

உடனடியாக திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு யாரும் உணவகத்திற்கு ஆய்வு செய்ய வந்துள்ளார்களா? என ஹோட்டல் உரிமையாளர் கேட்டுள்ளார். அவ்வாறு இல்லை என்பதே அறிந்து கொண்டு சம்பந்தப்பட்ட நபரை ஹோட்டலில் வேலை செய்யும் ஆட்களைக் கொண்டு மடக்கி பிடித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் போலி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சண்முக சுந்தரத்தை கைது செய்து மேலும் இதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் வேறு எங்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எனக் கூறி பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளாரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஹோட்டல் உரிமையாளரிடம் போலி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சண்முகசுந்தரம் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.