ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்
சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்
நிரந்திலங்கு வெண்பல் மடந்தை
பரிந்தனென் அல்லனோ இறையிறை யானே.
பாடியவர்: பனம்பாரனார்.
பாடலின் பின்னணி:
திருமணத்திற்கான முயற்சிகளைத் தலைவன் செய்வதையும், தலைவியின் பெற்றோர்கள் அதனை ஏற்றுக் கொண்டதையும் அறிந்து மகிழ்ந்த தோழி, தலைவியை நோக்கி, “நீ வருந்துவதை அறிந்த நான், உன் காதலைப் பற்றிய உண்மையை உன் தாய்க்கு அறிவித்தேன்; அதனால் உன் திருமணம் விரைவில் நடைபெறப்போகிறது.” என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
நரந்தம்பூவின் மணம் கமழும் திரண்ட கரிய கூந்தலையும், வரிசையாக விளங்கும் வெண்மையான பற்களையுமுடைய பெண்ணே (தலைவியே)! யானைகள் மிதித்ததால் உண்டாகிய பள்ளத்தில் தங்கிய நீர் விளங்கும் மலைப் பக்கத்திலுள்ள தெய்வத்தால் விரும்பப்பட்டவளைப் போல் நீ நடுங்கியதை அறிந்து, உன் வருத்தத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத நான் அதை நினைத்து நினைத்துப் பலமுறை உனக்காகப் பரிந்து பேசினேன் அல்லனோ?