கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கோவையில் பிப்ரவரி மாத மத்தியில் இருந்தே வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் கோவையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் வெப்பம் சற்று தணிந்து உள்ளது.
இன்று மதியம் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், தற்போது கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் லேசான இடியுடன் மழை பெய்தது. அவிநாசி சாலை, காந்திபுரம், கணபதி, உக்கடம், டவுன்ஹால், சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்னவேடம்பட்டி, சிவானந்தா காலனி, மணியக்காரன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக சுந்தராபுரம், ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது.
இதேபோல் சூலூர், பொள்ளாச்சி சாலை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், மதுக்கரை, எட்டிமடை உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென மழை பெய்ததால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.