நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் சுனாமி குடியிருப்பில் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நெரிசலான குடியிருப்புகளை கொண்ட செல்லூர் கிராம மக்கள் அப்பகுதியின் கடைசியில் அமைந்துள்ள வாய்க்காலை வடிகாலாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த நீர்நிலை புறம்போக்கு இடத்தை நாகை வட்டாட்சியர் ராஜா தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அளந்து நாகை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 6 பயனானிகளுக்கு இலவச பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே தங்களின் வடிகால் பகுதியாகவும், நீர்நிலை புறம்போக்கு இடமாக அமைந்துள்ள அந்த பகுதியில் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அங்கு குடியிருப்புகள் அமைந்தால் கழிவுநீர் தேங்குவதுடன் குடியிருப்பு பகுதிக்குள் கழிவுநீர் உட்புகும் அபாயம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். எனவே வடிகால் மற்றும் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் பட்டா கொடுக்கும் பணியை நிறுத்திவிட்டு, மாற்று இடத்தில் வழங்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.