தவெக கட்சியில் நிர்வாகியாக உள்ள ஆதவ் அர்ஜூனாவின் முட்டாள்தனத்திற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறியுள்ளார்.

ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜூனா சில மாதங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். அங்கு அவருக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அம்பேத்கர் குறித்த நூல் வெளியிட்டு விழாவில் திமுக குறித்து ஆதவ் அர்ஜூனா கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் ஆதவ் அர்ஜூனா இணைந்தார். அங்கு அவருக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தவெக முதலாவது பொதுக்குழுக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஆதவ் அர்ஜூனா, திமுகவையும், பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஆடு என்று கிண்டல் பேசினார். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் மார்ட்டினின் மகனான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அண்ணாமலையை விமர்சனம் செய்த ஆதவ் அர்ஜூனாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக மக்களின் நலனுக்காக அயராது பாடுபடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக ஆதவ் அர்ஜூனா கூறிய அவதூறான கருத்துக்கு எனது ஆட்சேபனையையும் மன்னிப்பும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஆதவ் அர்ஜூனா தனது மாமனார் பணத்தை, அதாவது என் தந்தையின் பணத்தை தவறாகப் பயன்படுத்துகிறார், எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கிறார். அத்துடன் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குகிறார். அவருக்கு இருக்கும் பதவி, பொருளாதார பேராசையைத் தீர்த்துக்கொள்ள பல கட்சிகளில் இணைந்து வருகிறார்.
எனவே அவரது முட்டாள்தனத்துடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதையும், அவரது செயலால் மேலும் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால், நீதிமன்றத்தை அணுகி எனது நற்பெயரைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்பதையும் தெளிவுபடுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன் என்று கூறியுள்ளார். ஆதவ் அர்ஜூனாவி;ற்கு எதிராக அவரது மச்சான் விடுத்துள்ள அறிக்கை தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.