அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே.
பாடியவர்: அம்மூவனார்.
பாடலின் பின்னணி:
தலைவியைவிட்டுப் பரத்தையோடு இருந்த தலைவன் மீண்டும் தன் இல்லத்திற்கு வந்து தன் மனைவியோடு வாழ்கிறான். தன் கணவன் பரத்தையிடமிருந்து விலகி வீட்டிற்கு வந்ததால், பெருமகிழ்ச்சியுற்ற மனைவி, இப்பிறவி மட்டுமல்லாமல் மறுபிறவியிலும் அவனே தனக்குக் கணவனாகவும் தானே அவன் விரும்பும் மனைவியாகவும் இருக்கவேண்டும் என்று தன் விருப்பத்தைத் தன் கணவனிடம் கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
அணிலின் பல்லைப் போன்ற கூர்மையான முள்ளையுடைய, தாது முதிர்ந்த முள்ளிச்செடியும், நீலமணியின் நிறத்தை ஒத்த கரிய கடல் நீரையும் உடைய நெய்தல் நிலத் தலைவனே! இப்பிறப்பு நீங்கி, நமக்கு வேறு பிறப்பு உண்டாயினும், நீயே என் கணவனாக இருக்க வேண்டும். நான் உன் மனதிற்கேற்றவளாக (மனைவியாக) இருக்க வேண்டும்.