மியான்மரில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 1,700 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3,408 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த மார்ச் 28-ம் தேதி அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. சிறிது நேரத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, அடுத்தடுத்து 6 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
மியான்மரின் அண்டை நாடுகளான வியட்நாம், மலேசியா, வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. இதன் காரணமாக, மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மிகப்பெரிய கட்டிடம் சரிந்து விழுந்தது.
மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. கட்டிட இடிபாடுகளை அகற்றுவதற்கு அங்கு போதிய வசதிகள் இல்லை. இதனால் உள்ளூர் மக்கள் கைகளால் இடிபாடுகளை அகற்றி உள்ளே யாரும் சிக்கியுள்ளனரா என தேடி வருகின்றனர். இதனால் அங்கு மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் தெருக்களில் தங்கியுள்ளனர். அவர்கள் உணவு மற்றும் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் போராடி வருகின்றனர். மியான்மரின் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 3,408 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, மியான்மரில் நேற்று முன்தினம் (மார்ச் 29) 5.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, மூன்றாவது நாளாக நேற்று 5.1 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டு மக்கள் பீதியில் உறைந்தனர்.