• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இது மாண்புக்கான போர்- உ.பி முதல்வர் யோகிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!

ByP.Kavitha Kumar

Mar 27, 2025

நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. ஆதிக்கத்தை, திணிப்பைத் தான் எதிர்க்கிறோம். இது வாக்கு அரசியலுக்கான கலவரம் அல்ல. நீதிக்கான, மாண்புக்கான போர் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏஎன்ஐ ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்தார். அதில், “மொழி என்பது மக்களைப் பிரிக்காமல் ஒன்றிணைக்க வேண்டும். தமிழ் இந்தியாவின் பழமையான மொழிகளில் ஒன்று. மேலும் அதன் வரலாறு சமஸ்கிருதத்தைப் போலவே பழமையானது. காசி தமிழ் சங்கமம் வாரணாசியில் நடக்கிறது. ஒவ்வொரு இந்தியரும் தமிழ் மீது மரியாதை வைத்துள்ள நிலையில், அவர்கள் ஏன் இந்தியை வெறுக்க வேண்டும்? இது வெறும் குறுகிய அரசியல். திமுகவின் வாக்கு வங்கி ஆபத்தில் இருப்பதாக உணர்ந்ததால், மாநிலங்கள் மற்றும் மொழி அடிப்படையில் மு.க.ஸ்டாலின் பிளவுகளை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். மக்கள் எப்போதும் இதுபோன்ற பிளவுவாத அரசியலுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அனைவரும் அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் பிற மொழிகளை கற்பிக்கும்போது, தமிழக பல்கலைக் கழகங்களில் இந்தியை கற்பிப்பதில் என்ன தவறு? தொகுதி மறுவரையறை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கிவிட்ட பின்னரும் அரசியலுக்காக மு.க.ஸ்டாலின் அதுகுறித்து குற்றம்சாட்டுகிறார்.” என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார். அதில், “இருமொழிக் கொள்கை, நியாயமான தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் நியாயமான, வலுவான குரல் தேசிய அளவில் ஒலிப்பதால் பாஜக கலக்கமடைந்துள்ளது. அக்கட்சியின் தலைவர்கள் அளிகும் பேட்டியில் அது புலப்படுகிறது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நமக்கு வெறுப்பு பற்றி பாடம் எடுக்கிறார். எங்களை விட்டுவிடுங்கள். அவர் வெறுப்புபற்றி பாடமெடுப்பது நகை முரண். அரசியல் அவல நகைச்சுவையன்றி வேறு என்னவாக இருக்க முடியும்? நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. ஆதிக்கத்தை, திணிப்பைத் தான் எதிர்க்கிறோம். இது வாக்கு அரசியலுக்கான கலவரம் அல்ல. நீதிக்கான, மாண்புக்கான போர்.” என்று கூறியுள்ளார்.