• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சீனாவில் ஒரு நாளைக்கு 6.30 லட்சம் பேருக்குத் தொற்று ஏற்படலாம் – எச்சரிக்கை

Byமதி

Nov 30, 2021

சீனா தற்போது கடைப்பிடித்து வரும் கடும் கொரோனா கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும், ஏதேனும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சர்வதேச விமானப் போக்குவரத்தை அனுமதித்தால் நாள்தோறும் 6.30 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்படலாம் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தற்போது மிகக் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. கடந்த சனி அன்று அங்கு வெறும் 23 பேர் மட்டுமே புதிதாகத் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு அறிவித்தது. இதில் 20 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் மொத்தமாகவே 785 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சீனாவைப் பொறுத்தவரை மக்கள்தொகையில் 76.8 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திவிட்டனர். இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் பெக்கிங் கணிதப் பல்கலைக்கழகம் சீனாவின் கொரோனா தொற்று குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “சீனா தற்போது கடைப்பிடித்துவரும் கடும் கட்டுப்பாடுகள் தொடர வேண்டும். ஒருவேளை சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு அனுமதித்தால், கொரோனா தடுப்பு முறைகளைத் தளர்த்தினால், மிகப்பெரிய அளவில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அதிகபட்சமாக நாள்தோறும் 6.30 லட்சம்வரை பாதிக்கப்படலாம்” என எச்சரித்துள்ளது.

சீனாவில் சினோவேக் தடுப்பூசி தயாரிக்கும் சினோவேக் பயோடெக் நிறுவனம் கூறுகையில், “ உலக அளவில் ஒமைக்ரான் வைரஸ் குறித்து தொடர்ந்து நாங்கள் கண்காணித்து வருகிறோம். எங்களின் சர்வதேசக் கூட்டாளி நிறுவனங்களுடன் இணைந்து அடுத்தகட்ட ஆய்வுக்கு நகர்ந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.